Type Here to Get Search Results !

சைவம் திரைப்பட விமர்சனம்





படத்தின் முதல் காட்சியிலேயே மார்க்கெட்டில் ஆடு, கோழி, மீன், நண்டு, எறா, காடை என அனைத்தும் வாங்கி தனது அசைவ குடும்பத்துக்கு விருந்தளிக்க செல்கிறார் விசாலாக்‌ஷி (நாசரின் மனைவி). நாசரின் பேத்தியாக தெய்வ திருமகள் சாரா. மாட்டில் தொடங்கி ஆடு, கோழி, சேவல் என அனைத்திற்கும் மனித பெயர்களை வைத்து வளர்த்து வருகிறார்கள் இவர். இதில் ஒன்று தான் பாப்பா எனும் பெயர் கொண்ட சேவல். ஒவ்வொரு முறையும் சாராவை தேடிக் கொண்டு அவர் படிக்கும் பள்ளிக்கு செல்வதே வழக்கமாக வைத்துள்ளது இந்த சேவல்.

வருடத்திற்கு ஒரு முறை சொந்தங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அதுவும் ஒரு சுப காரியத்துக்கு ஒன்று சேர்ந்தால் அந்த குடும்பம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்பதை திரையில் காட்டியிருக்கிறார்கள். ஊர் எல்லைச்சாமிக்காக நேர்ந்துவிட்ட சேவலை வீட்டில் வளர்க்க கூடாது என்று முடிவெடுத்து அந்த சேவலை சாமிக்கு பலியாக்க முடிவெடுக்கிறார்கள் குடும்பத்தார் அனைவரும். செல்லமாக வளர்த்த சேவலின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்ததும் அதை வீட்டில் யாரும் அதிகம் வராத ஒரு அறையில் வைத்து பாதுகாக்கிறார் சாரா. எல்லைச்சாமிக்கு நேர்ந்துவிட்ட சேவலை பலி கொடுத்தார்களா?, சாராவின் எண்ணம் நிறைவேறியதா என்பதே மீதி கதை….

நாசரின் மகன் லூத்ஃபுதீன் பாஷா தனது திரை வாழ்க்கையை தந்தையின் படம் மூலமாகவே தொடங்கியிருக்கிறார். திரையில் இவர் வரும் காட்சிகள் அனைத்திலும் அப்படி ஒரு சுறுசுறுப்பு கிராமத்துக்கு சென்றால் நாம் என்ன செய்வோமோ அதைத்தான் அவர் படம் நெடுங்கிலும் செய்துக் கொண்டிருக்கிறார். புரியலையா, இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் சொந்தக்கார பெண் அதுவும் அத்தை பெண் அழகாக இருந்தால் என்ன செய்வோம் அதைத்தான் அவர் செய்கிறார். எப்படியாவது அத்தை மகள் துவாராவிடம் பேசி அவளை காதலிக்க செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வது இதற்கு தடையாக தன் தம்பியே குறுக்க நிற்பது என அழகாக ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு குடும்பங்கள் கொண்டாடும் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள், இதில் சாராவை பழி வாங்க துடிக்கும் சரவணன் என்கிற ரே பால்-ன் முக பாவனை அவரை நிஜ வில்லனாகவே நினைக்க வைக்கிறது. சேவலை ஒளித்து வைத்திருக்கும் சாராவை போட்டுக் கொடுக்க குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் சொல்லி மொக்கை வாங்குவது படத்தின் ஹைலைட். நடிகர் சுரேஷ் ஒரு கெஸ்ட் கதாபாத்திரத்தில் கடைசியாக வருகிறார். ஒரு காட்சியில் வந்தாலும் நச்சென்று மனதில் நின்றுவிடுகிறார்.

தெய்வதிருமகள் படத்தில் நடித்த சாராவின் அழகான நடிப்பை நம்மால் இன்றளவும் நினைவுகூர்ந்து மெய் சிலிர்க்க வைக்கிறது. தற்போது சைவம் படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு அதிகம் இருந்ததை உணர்ந்து அனைத்து காட்சியிலும் அழகான முகபாவனைகளில் நம்மை கட்டிப்போடுகிறார் இவர்.

இசை நாசருக்கும் சாராவுக்கும் வரும் அந்த பின்னணி இசை அழகு. ஆனால் ரே பாலின் பின்னணி இசை தான் எங்கேயோ அடிக்கடி கேட்ட மாதிரியே இருக்கிறது. பாடல்களில் “அழகே அழகு” பாடல் மனதில் பதியும் அழகு….

இது ஒரு உண்மை சம்பவம் என்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஜய் பேசியது நினைவுக்கு வருகிறது. தான் நினைத்ததை திரையில் அழகாக காட்டியிருக்கிறார். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில் வரண்ட பூமி கூட பசுமையாய் தெரிகிறது.

அ(ட)சைவமாக இருந்த நம்மை இறுதியில் சைவமாக மாற்றி காய்(கறி)யை ருசிக்க வைக்கிறது இந்த “சைவம்”.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.