Type Here to Get Search Results !

நடிகர் திடீர் கண்ணையா மரணம்!




சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த "திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 

இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனை காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாக காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. 

இதனால் அவர் 'திடீர்' கண்ணையா என்றழைக்கப்பட்டார். ஒரு படத்தில் வடிவேலுவிடம் தனது ஆட்டைப் பறிகொடுத்துவிட்டு, பின் பஞ்சாயத்தில் அதைச் சொல்லமுடியாமல் அவர் படும்பாடு மிகப் பிரபலமான நகைச்சுவையாக இன்று வரை திகழ்கிறது. கண்ணயாவுக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். அயனாவரம் சக்ரவர்த்தி நகரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள்கிழமை (நவம்பர் 18) காலை நடைபெறுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.